About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Sunday 28 August, 2011

கிராமத்து சொர்க்கம்





இரவு நிலா வெளிச்சத்தினில்
எல்லோரும் கூடி உணவருந்தும் சுகம்
இப்போது இல்லையே

தாத்தாவும் பக்கத்து வீட்டாரும்
உலகக் கதை பேசும் சுகம்
இப்போது இல்லையே

திருவிழா காலங்களில் ஆண்களும்
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே

கார்த்திகை தீபத்திற்கு பெண்களெல்லாம்
ஏரியில் விளக்கு விடுவது
இப்போது இல்லையே

நம் வீட்டு குழம்பு ருசிக்காதபோது 
பக்கத்துவீட்டு குழம்பு வாங்கி சாப்பிடும் சுகம்
இப்போது இல்லையே


வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே

எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!


Saturday 20 August, 2011

சிங்கப்பூரில் பேய் பூஜை

            சிங்கப்பூரில் இது பேய் மாதமாகும். அதாவது சீன மாதத்தில் ஏழாவது மாதம் பேய் மாதமாக கொண்டாடுவார்கள். சிங்கப்பூரில் உள்ள கிட்டதட்ட அனைத்து சிறிய, பெரிய நிறுவனகள் கடைகள் மற்றும் வீட்டமைப்பு பகுதிகளில் கூட இந்த பூஜை நடக்கும்.
                                                       
                                                     படம் : பழங்கள்

இந்த எழாவது மாதத்தில் தான் பேய்களுக்கான வாசல் திறந்திருக்குமாம். அப்போது தான் இந்த பேய்கள் எல்லாம் வெளியில் நடமாடுமாம். அதனால் தான் இந்த மாதத்தில் பூஜை செய்து பேய்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.

                                      படம் : முழுசாக பொறித்த பன்றி

நம்ம ஊரில் பேய் பிடித்திருந்தால், அவர்களுக்கு பேய் விரட்டும் போது மந்திரவாதி உனக்கு என்ன வேனும்னு கேட்டு வாங்கிட்டு போ என்பார்கள். அது ஆண் பேயாக இருந்தால் சாராயம், வேட்டி சட்டை என கேட்கும், பெண் பேயாக இருந்தால் சேலை, பூ, வலையல், பொட்டு என கேட்கும்.  அதுபோல இந்த பேய்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்து படைப்பார்கள்.

                                             படம் : பேப்பர் எரித்தல்

இங்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மதுபானம் (பீர்) மற்றும் பன்றி போன்றவை வைத்து படைப்பார்கள். முழுப்பன்றியை அப்படியே எண்ணெயில் பொறித்து வைத்திருப்பார்கள். சீனர்கள் பன்றியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பிறகு பேப்பர் எரித்தல் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். மேலே உள்ளது போன்று அடுக்கி பிறகு அதை எரிப்பார்கள். அதன் பிறகு சாப்பாடும் உண்டு.

                                                 
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.



Friday 19 August, 2011

பிரம்மச்சாரி





வேலை முடிந்து வரும்போது
மனைவிக்கு மல்லிகைப்பூ


வீட்டுக்கு வந்ததும்
குழந்தைகளின் குதூகல சிரிப்பு


இரவானால் கிடைக்கும் மனைவியின்
அன்பான அரவணைப்பு


குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா
செல்லும்போது கிடைக்கும் பூரிப்பு


இவையெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறது என் பிரம்மச்சாரி நண்பனுக்கு.



Tuesday 16 August, 2011

!!! கவிதை எழுத !!!






எட்டி எட்டி பார்க்கும்
நிலவை உற்று நோக்கினேன்

எதிர்வீட்டு ஜன்னலை
ஏக்கத்துடன் பார்த்தேன்

கடற்கரை காற்றில்
தனிமையில் நடந்தேன்

குளத்தங்கரை தண்ணீரில்
கல்வீசிப் பார்த்தேன்

அவளாய் நினைத்து
மலரை காதலித்தேன்

சுட்டுப் போட்டாலும் வரவில்லை கவிதை எழுத!!!



Sunday 14 August, 2011

மறைந்து போன மரத்தடி சலூன்கள்


"ஏசி' அறையில் உட்கார்ந்து "ஸ்டெப் கட்டிங்' போடும் மோகம் அதிகரித்ததால், மாறும் உலகில் மரத்தடி சலூன்கள் மறைந்து போனது.அப்பாவின் கூடை வைத்த சைக்கிளில் அமர்ந்து கொண்டு, வழியில் விளையாடும் நண்பர்களிடம் உற்சாகமாய், "நான் முடிவெட்ட போறேன்...' என்று கத்தும் பூரிப்பை 25 ஆண்டுக்கு முன் சிறுவர்களிடம் பார்த்திருப்போம்.

இன்று நடைமுறையில் இருப்பதை போல, "பரந்த கண்ணாடி, "ஏசி' அறை, "வீல்' நாற்காலிகள், அலங்காரா திரவங்கள்,' அன்று இல்லை. இருந்தும், ஆர்வம் தந்தன மரத்தடி சலூன்கள். அவை தான் அன்றைய இளைஞர் பட்டாளத்தின் பியூட்டி பார்லர்.

 "பாகவதர் ஹிப்பி, எம்.ஜி.ஆர்., கர்லிங், சுதாகர் ஸ்டெப், டி.ராஜேந்தர் பங்க், கமல் அட்டாக், மிஷின் கட்டிங், சிசர் கட்டிங்' என, பலவகை கட்டிங் முறை பிறந்ததும் அங்கு தான். சட்டையை கழற்றியதும், முகம் பார்க்கும் கண்ணாடியை கையில் கொடுத்து நம்மை நாமே ரசிக்க செய்து, முடிவெட்டியது அந்த காலம். பாட்டில் தண்ணீரை "ஸ்பிரே' மூலம் முகத்தில் "புஸ்" "புஸ்' என அடித்து விட்டு, தீட்டிய கத்தியில், தாடியை பறிகொடுக்க பெருங்கூட்டம் காத்திருக்கும்.

முகம் மழுமழுவென இருக்க கத்தியில் "ஷேவ்' செய்து விட்டு, வெள்ளை காரக்கல்லை வைத்து முகத்தில் தேய்க்கும் போது, சுர்ர்ரென்ற சுகம் இருக்கிறதே...அது எல்லாம் அந்த காலம். 

இன்று "ஏசி', "டிவி', வைத்து, அலறும் பாடல்களை ஓடவிட்டு அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். பாரம்பரியத்தை அழித்த நவீனம், இந்த தொழிலிலும் புகுந்ததால் மரத்தடி சலூன்கள் மறையத்தொடங்கின. தென்மாவட்டத்தில் ஆங்காங்கே கிராமங்களில், விரல் விட்டு எண்ணும் அளவில் தான் மரத்தடி சலூன்கள் உள்ளன.

நகரத்தில் கட்டிங், ஷேவிங் செய்ய 50 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதே பணிக்கு மரத்தடி சலூனில் 15 ரூபாய். இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவிருக்கும் மரத்தடி சலூன்களை (மரம் இருந்தால் தானே மரத்தடி சலூன் இருக்கும்), வரும்காலத்தில் நாம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினாலே பெரிய விஷயம்.

நன்றி : தினமலர், 14-08-2011

Friday 12 August, 2011

செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றிய ஒரு பார்வை

 நன்பர்களே, இன்றைய உலகில் செக்ஸ் கல்வியின் அவசியத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் மிகுந்த சிரமமாக உள்ளது. நம் வீட்டில் பெற்றோருடனும், அக்கா தங்கையுடனும் ஒன்றாக உட்கார்ந்து ஒரு குத்துப்பாட்டு பார்க்க முடியாத நிலமையில் தான் நாம் உள்ளோம்.

பிறகு எப்படி செக்ஸ் பற்றிய விஷயங்களை நாம் நம் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ள போகிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். நான் +2 படிக்கும் போது எங்களுடைய ஆசிரியர் உயிரியியலில் பெண்களுக்கு வரும் மாதவிடாயை பற்றி வகுப்பு எடுக்கும் போது, மாணவிகளை வெளியில் அனுப்பிவிட்டு எங்களுக்கு பாடம் எடுத்தார்.

பிறகு மாணவிகளிடம் இதுபற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும், அதனால் இந்த பகுதையை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஒரு ஆசிரியரே இதுபோன்ற செக்ஸ் பற்றிய விஷயங்களை மாணவ மாணவிகள் இருக்கும் இடத்தில் தவிர்க்கும்போது, பெற்றோர்கள் எப்படி குழந்தைகளிடம் வெளிப்படுத்துவர்.

செக்ஸ் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் நம்மை பக்குவபடுத்திக்க வேண்டும், அப்போது தான் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூற முடியும்.

 நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்த்தால் 6 வயது, 7 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை என்று படிக்கிறோம். இந்த மாதிரி நடந்துக்கொள்ளும் காமக்கொடூரங்கள் புதிதாக முளைத்து வருவதில்லை. நம் அக்கம் பக்கம் வீட்டில், அல்லது நம் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோகும் நபர்கள் தான்.

மேலை நாடுகளில், ஏன் சிங்கப்பூரிலும் இந்தமாதிரி சம்பவங்கள் நிறய நடக்கின்றன. அங்கு வீட்டிற்குள் இருக்கும் வளர்ப்பு தந்தைகளாலேயே பல குழந்தைகளின் வாழ்க்கை சூறையாடப்பட்டுவிடுகிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது அந்த குழந்தகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றன.

சிங்கப்பூரில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு நாடகம் ஒளிபரப்புகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள நாடகம் எடுப்பதில் ஒருவரும் அக்கறை காட்டுவதில்லை.

அதனால் நாம் தான் நம் குழந்தைகளிடம் எந்த மாதிரி தொடுதல் சரியானது, எது தவறானது என்பதை சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு எளிதாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று.



எந்த மாதிரி தொடுதல் சரி, எந்த தொடுதல் தவறு என்றும் அது எந்த சூழ்நிலையில் நடந்தால் சரி, தவறு என்பதையும், அப்படி மற்றவர்கள் தவறாக
நடக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் அழகாக சொல்லிக்கொடுக்கிறார்.

ஒவ்வொரு பெற்றோடும் தங்கள் பிள்ளைகளை நண்பர்களாக நினைத்து அவர்களிடம் மனம்விட்டு செக்ஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொண்டால், நம் பிள்ளகளுக்கு பாதுகாப்பும், பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள உறவும் மேம்படும்.

செக்ஸ் கல்வியை கற்றுக்கொடுங்கள், காமக்கொடூரன்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள்.


Saturday 6 August, 2011

கணிணி பிரச்சினைக்கு தீர்வுகாணும் வலைப்பதிவாளர்களின் வலைத்தளங்கள்.

 நண்பர்களே, கணிணி இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.  அதில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருக்கின்றன. தெரிந்த விஷயங்களை பற்றி பிரச்சினை இல்லை. தெரியாத விஷயங்களை பற்றி தான் பிரச்சினை. 

தெரியாத விஷயங்களை அனேகமாக கூகுள் தேடுபொறியில் தான் தேடுவோம். அவற்றில் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். ஆனால் அவை அனைத்தையும் புரிந்துக்கொள்வது சற்று கடினம்.


அதுவே நம் தாய்மொழியான தமிழில் கிடைத்தால் மிகவும் எளிதாக இருக்கும். அதற்காக தான் நம்ம வலைபதிவு நண்பர்கள் நமக்காக தேடி தேடி அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை நம் தமிழ்மொழியில் பதிவிடுகிறார்கள்.

அப்படி கணிணி பற்றி பதிவிடும் அனைத்து வலைத்தளங்களையும் நாம் தேடுவது சிரமம். அதனால் தான் கொஞ்ச நேரம் செலவிட்டு எனக்கு தெரிந்த சில முன்னணி வலைத்தளங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.





















இதை விட கணிணியை பற்றிய செய்திகளை சிறப்பாக தரும் சிறந்த வலைப்பதிவர்களும் இருக்கலாம். அப்படி இருக்கும் நண்பர்கள் தயவு செய்து வருத்தப்படாமல் உங்கள் வலைத்தள முகவரியை என் பின்னூட்டத்தில் இடுங்கள். நான் சேமித்துக்கொள்கிறேன்.