About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday, 18 February, 2013

என் ஆர் ஐ (NRI Home loan)-க்கள் வீடுகட்ட வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவது எப்படி?

                நண்பர்களே, நான் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வில் வங்கிக் கடன் வாங்கியுள்ளேன். அதன் அனுபவத்தையும் அதற்கு தேவைப்படும் ஆவணங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் முதலில் வங்கியின் உதவி மேலாளரை அனுகினேன், அவர் கீழ்கண்ட ஆவணங்களுடன் வர சொன்னார். ஒரே நாளில் கடன் கிடைத்து விடும் என்றார். நானும் கீழ்கண்ட ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.


  
 KYC ( Know your Customer) உங்களை பற்றிய தகவல்கள்.

1. Ration card, Voter Id, Passport, Driving Licence, Pan Card. இதில் எதாவது இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் கண்டிப்பாக வேண்டும்.

2. Work Permit Copy (உங்களின் வேலை அனுமதி அட்டை) , Nature of work & Contract of work (அதாவது நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் & எத்தனை வருட ஒப்பந்தத்தில் வேலை செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்).

3. Salary slip or pay slip for 1 year.(உங்களின் சம்பள ரசீது ஒரு வருடத்திற்கானதை தர வேண்டும்)

4. Bank Statement for 1 year (  நீங்கள் வேலைப் பார்க்கும் நாட்டில் உள்ள உங்கள் வங்கி கணக்கின் ஒரு வருடத்திற்கான வங்கி பரிவர்த்தனை விபரம்)

5. Salary certificate with attestation of High commission of India ( உங்கள் கம்பெனியின் லெட்டர் பெடில் உங்கள் சம்பளத்தை குறிப்பிட்டு அதில் இந்திய தூதரகத்தின் முத்திரை வாங்க வேண்டும்).

6. Income Tax Details ( நீங்கள் வேலை பார்க்கும் நாட்டில் ஒரு வருடத்திற்கான உங்களின் வருமான வரி ரசீது) 

7. Passport copy xerox the pages stamp by Immigration ( குடி நுழைவுத்துறையால் முத்திரை குத்தப்பட்ட அனைத்து பக்கங்களும்)

Documents (ஆவணங்கள்)

8. Power Of Attorney(POA) attestation by High commission of India (நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் உங்கள் இடத்திற்கான அதிகாரம் (மற்றொருவருக்கு) வழங்குதல், இதற்கான விண்ணப்பத்தை உங்கள் வங்கியின் அதிகாரியிடமிருந்து பெற்று நீங்கள் இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் முத்திரை வாங்க வேண்டும்).

9. Registration of Power Of Attorney(POA) at District Register office and Sub-Register office.( நீங்கள் அனுப்பிய POA சான்றிதழை உங்கள் மாவட்ட பதிவாளர் அலுவத்திலும் பின்பு வட்டார துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது வெளி நாட்டிலிருந்து POA அனுப்பிய தபாலின் உரையையும் கொண்டு செல்ல வேண்டும்.

10. Individual patta of plot ( உங்கள் இடத்தின் தனிப் பட்டா, சிலருடைய இடம் கூட்டுப்பட்டாவில் இருக்கும்) எனக்கு தனிப்பட்டா வாங்க இரண்டு மாத காலம் பிடித்தது. அந்த அளவிற்கு நம்ம அதிகாரிகள் வேகமாக(?) வேலையை முடிச்சி தாராங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஆள் இருந்தால் வேகமா முடியும் இல்லைனா, ஆமையை விட மெதுவாக தான் நடக்கும்.

11. Non Agriculture Certificate of land (இந்த இடம் விளை நிலம் அல்ல, மனைப்பகுதி தான் என்பதை உங்கள் வட்டார தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும், இந்த சான்றிதழ் பெறுவதற்கு தாசில்தார் உங்கள் இடத்தை நேரில் பார்வையிடுவார், அதற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆகும், ஒருவேளை நீங்கள் அவருக்கு கையூட்டு கொடுத்தால், வேலை வேகமாக முடியும்)

12. இந்த இடத்திற்கான மூலப்பத்திரம் 

13. Estimation certificate from your Engineer ( வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்பதை  அரசு பதிவு பெற்ற கட்டிட பொறியாளரிடமிருந்து)

14. Plan approval and Lay out from Panchayat office, or Municipality or Corporation (உங்கள் பகுதி பேரூராட்சியாகவோ அல்லது நகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ இருந்தால் அவர்களிடம் உங்கள் வீட்டு வரைபடம் மற்றும் வழியமைப்பு ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டும். இதற்கும் நேரில் பார்த்து தான் அனுமதி அளிப்பார்கள். குறைந்தது 15 நாட்களாவது ஆகும்)

15. Valuation Certificate from an Approved Engineer ( அரசு பதிவு பெற்ற பொறியாளரிடமிருந்து இடத்திற்கான மதிப்பீட்டு சான்றிதழ் பெற வேண்டும். இவர் எவ்வளவு கடன் தரலாம் என சொல்கிறாரோ அதிலிருந்து 80 சதவீதம் தான் நமக்கு கடன் தருவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பொறியாளரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்)

16. Encumbrance certificate for 32 years (32 வருத்திற்கான வில்லங்க சான்றிதழ்)

17. Land tax receipt (வீட்டு வரி ரசீது)

18. Legal opinion certificate from a Lawyer( வழக்கறிஞரிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும், எந்த வழக்கறிஞரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்).

இவை அனைத்தையும் உங்கள் இடத்தின் பத்திரத்துடன் வங்கி அதிகாரியிடம் சமர்ப்பித்தால் கடனுக்கான படிவத்தை பூர்த்திசெய்து ஓரிரு நாளில் கடன் கொடுத்து விடுவார்கள்.

இந்த அனைத்தும் வாங்குவதற்கு கிட்டதட்ட 10 மாதங்கள் ஆயிற்று. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் அனைவரும் நம்மை அலைய விடுவாங்க பாருங்க, அதற்கு கடனே வாங்க வேண்டாம்னு ஆகிடும். அந்த அளவுக்கு கடுப்பேத்துவாங்க. இவ்வளவுக்கும் இவனுங்களுக்கு கையூட்டு கொடுத்தே இவ்வளவு நாள் ஆகுதுன்னா பாருங்க. 

உங்களுக்கு சொந்தக்காரர்கள் இந்த அலுவலகங்களில் இருந்தால் இன்னும் வேகமாக முடியுமென்பதில் சந்தேகமில்லை. 

நீங்களும் (கடன் வாங்கி அல்லது கடன் வாங்கமல்) வீடு கட்டி சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.

Saturday, 18 February, 2012

வெளிநாட்டு வாழ்க்கை மதில்மேல் பூனை.

 வணக்கம் நண்பர்களே, வெளி நாட்டுக்கு வரனும்னு நினைப்போர் இதைப் படிங்க அல்லது உங்கள் நண்பர் வெளி நாடு வரனும்னு நினைச்சா அவங்ககிட்ட சொல்லுங்க.

                                                               

  நான் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறேன். 6 வருடம் முடிந்து 7 வது வருடம் போய்க்கொண்டு இருக்கிறது. 4 வருடம் முடிந்ததும் சிங்கப்பூர் வேலையே வேண்டாம் என வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இந்த நாலு வருடத்தில் பல நண்பர்களுடைய தொடர்பு குறைந்தும் சில நண்பர்களுடைய தொடர்பு துண்டித்தும் போயின.

தொடர்பிலிருந்த ஒன்றிரண்டு நண்பர்களின் உதவியுடன் வேலைத்தேடி அலைந்தேன். 4 மாத அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக சென்னையில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்துவிட்டது, ஆனால் தங்குவது எப்படி? அதற்கு 3 நாட்கள் அலைந்த பிறகு ஒரு ரூம் வாடகைக்கு கிடைத்தது. வேலைக்கு சென்ற 1 வருடத்திற்குள் திருமணம் முடிந்தது. ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு அங்கு சம்பளம் தரவில்லை. அதனால் மீண்டும் சிங்கப்பூர் வந்து விட்டேன்.

  முதல் தடவை சிங்கப்பூர் வராமல் நம்ம ஊரிலேயே இருந்திருந்தால் நம்ம ஊரிலேயே நல்ல சம்பளமும் நல்ல கம்பெனியிலும் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். மற்றும் பல நண்பர்களின் நட்பு கிடைத்திருக்கும், அவர்கள் மூலமாக பல நல்ல கம்பெனிகளுக்கு மாறுதலாகி போயிருக்கலாம்.

அதேபோல வெளி நாட்டில் வேலைபார்த்துவிட்டு நம்மூரில் வேலைதேடும் போது, வெளி நாட்டில் வேலைப்பார்த்ததால் நமக்கு நிறய தெரிந்திருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போது நமக்கு வேலை கிடைப்பதில்லை.

சரி, வெளி நாட்டிலேயே தங்கிவிடலாம் என்றால், இங்கு வாங்கும் சம்பளம் இங்கேயே செலவுக்குகூட பத்தாது. அப்புறம் எப்படி குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது. கண்டிப்பாக ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற சூழ் நிலையில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

 நண்பர்களே, இந்த மாதிரி நிலமையெல்லாம் வராமலும், சொந்த பந்தங்களுடனும் இருக்கனும் மற்றும் சந்தோசமாகவும் இருக்கனும் என்றால் நம்ம ஊரிலேயே தொடர்ந்து இருக்க முயற்சி செய்யுங்கள். நம்ம ஊரும் தொழில் துறையில் நல்ல வளர்ச்சியடைந்துக்கொண்டு வருகிறது. அதனால் நம்ம ஊரிலேயே வேலை செய்தால் சொந்த பந்தங்களின் விசேஷத்துக்குப் போகலாம், குடும்பத்துடன் பொங்கல் தீபாவளி கொண்டாடலாம். இன்னும் பல சந்தோசங்களை அனுபவிக்கலாம்.

இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.

Thursday, 29 September, 2011

ஏழைப்பெண்

மாதம் முடிந்தால் கையொப்பமிட்டு 
சம்பளம் வாங்க எங்கப்பன் 
ஒன்றும் படிக்கவில்லை


ஏர் உழுது அறுவடை செய்ய
எங்கப்பனுக்கு நிலமும் இல்லை


கூலி வேலை செய்யனும்னா 
எங்கப்பனுக்கு குருதியும் குறைஞ்சுப்போச்சு


பார்க்க வரும் வரன்கள் எல்லாம்
பத்து சவரனாவது கேட்குறாங்க


இனிமேலும் இருக்க விரும்பவில்லை
எங்கப்பனுக்கு சுமையாக


இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே

Friday, 23 September, 2011

உங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க

உங்கள் ஊரின் மேப்பை உங்கள் ப்ளாக்கில் கூகுள் வழியாக இணைக்கலாம். ஆனால் கூகுள் மேப்பை இணைக்கும் போது மேப்பின் அளவை தேவையான அளவிற்கு கூட்டி குறைக்க முடிய வில்லை. எனவே wikimapia.org  என்ற முகவரிக்கு சென்று நீங்கள் Sign Up செய்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் Id யை கொடுத்து Sign In செய்துக்கொள்ளுங்கள். பின்பு மேப்பில் உங்கள் ஊர் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.

அங்கு உங்கள் வீட்டை கூட பார்க்க முடியும். பின்பு மேப்பில் உள்ள Add place ல் க்ளிக் செய்து உங்கள் ஊர் இருக்கும் இடம் அல்லது உங்கள் வீடு இருக்கும் இடத்தை குறியுங்கள். அதில் உங்கள் வீட்டின் பெயரையும் கூட எழுதலாம். கீழே இருப்பது போன்று.


அதன்பின் மேப்பில் உங்கள் Id யை க்ளிக் செய்தால் Map on your page என்ற ஐகானை தேர்வு செய்யுங்கள்.  Map on your page யை க்ளிக் செய்ததும் சதுரமான பெட்டி ஒன்று உங்கள் மேப்பில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று. தோன்றும். அதை நீங்கள் தேவையான இடத்திற்கு மாற்றியும் தேவையான அளவிற்கு சரி செய்தும் கொள்ளலாம். 


தேவையான இடத்தை தேர்வு செய்த பின்பு தேர்வு செய்த இடத்திற்க்காண HTML CODE யை காபி செய்து உங்கள் Dashbord ல் உள்ள Design என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள். பின்பு add gadget ஐ க்ளிக் செய்து Html java script ற்கு சென்று இங்கு பேஸ்ட் செய்த பின் Save பண்ணுங்கள். அவ்வளவு தான். இப்போது உங்கள் வீட்டின் மேப் உங்கள் ப்ளாக்கில் இணைக்கப்பட்டிருக்கும். 

Tuesday, 20 September, 2011

மூடநம்பிக்கை எப்போது ஒழியும்?


இந்த பதிவு மூடநம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பற்றியது. மூடநம்பிக்கையுடையோர் படிக்க வேண்டாம்.

நம் நாட்டில் இந்துக்கள் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பிள்ளை பிறந்ததும் பெயர் சூட்டுதல், பள்ளிக்கு சேர்த்தல், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெண்வீடு பார்க்க செல்லுதல் (அ) மாப்பிளை வீடு பார்க்க செல்லுதல், திருமண நாள், முதலிரவு நாள், வீடு கட்ட மனை முகூர்த்தம் நாள், குடிபுகுதல் நாள் என ஒவ்வொன்றுக்கும் நாள் பார்த்து ஜாதகம் பார்த்து தான் செய்கிறார்கள்.

அப்படி பார்த்து பார்த்து செய்யும் அனைத்து குடும்பங்களும் சந்தோசமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கிறார்களா? இல்லை என்று தான் சொல்லுவேன்.


மூடநம்பிக்கை சம்பவம் 1.

சுபமுகூர்த்த நாளில் முகூர்த்தம் செய்து  வீடு கட்ட ஆரம்பித்து, நல்ல முறையில் வீட்டை கட்டி முடித்தார்கள். கிட்ட தட்ட 5 அல்லது 6 வருடமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்போ அந்த வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குதாம். அதனால் பூசாரியை கூட்டி வந்து பேய் ஓட்டினார்கள். அப்பவும் சரியாக வரல. அதனால் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார்கள். இன்னும் 2 மாதத்திற்கு வீட்டுக்கு கிரகம் சரியில்லை அதனால் வேறு வீட்டில் 2 மாதம் குடியிருங்கள் என்கிறார். 


மூடநம்பிக்கை சம்பவம் 2.

என் நண்பனின் அக்காவுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்கு வீட்டை விட்டு கிளம்பினார்கள், அப்போது ஒரு பூனை குறுக்கே வந்தது. அதனால் அந்த வரன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் நண்பனின் அப்பா. ஆனால் அவருக்கு அந்த மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் ரொம்ப பிடித்திருந்தது. இருந்தும் பூனை குறுக்கே வந்ததால் அந்த வரனை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

மூடநம்பிக்கை சம்பவம் 3.

 ஒருவருக்கு பயங்கர வயிற்று வலி. ஏன் ஆஸ்பத்திரிக்கு போக வில்லைன்னு கேட்டால் இன்னக்கி நாள் சரியில்லை என்றும் அப்படி மீறி போனால் இவர் உயிருக்கு ஆபத்தாகி விடுமாம். அதனால் உள்ளூர் மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு வரவைத்து வலி நிற்க ஊசிப்போட்டுக்கொண்டுள்ளார்.

மூடநம்பிக்கை சம்பவம் 4.

 நண்பர் ஒருவரிடம் அவசரமாக பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டிருந்தேன். காலையில் சரி என்றவர், மாலையில் நாளைக்கு வாங்கிக்கலாம் என்றார். ஏனென்றால் அன்று செவ்வாய் கிழமையாம்.

மழை வேண்டி கழுதையை திருமணம் செய்வது, குழந்தையை நரபலி கொடுப்பது என்று இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் அல்ல . இப்பொழுதும் நடந்துகொண்டு இருப்பவை தான்.


திருமணம் செய்வதற்கு ஜாதகம் பார்த்தால் அது நம்பிக்கை. ஆனால் அந்த ஜாதகம் பார்ப்பதற்க்கு கூட அவர் வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் நல்ல நேரம் பார்த்து கிளம்புகிறார்களே அதை என்ன சொல்வது. அதை தான் மூடநம்பிக்கை என்கிறேன்.

மேலை நாடுகளில் ஜாதகம் பார்ப்பது கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் நம்மூரிலும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையோர் ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது கிடையாது. அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இந்துக்களாகிய நம் மக்கள் தான் பையன் அல்லது பெண்ணை பிடிச்சிருந்தாலும் கூட ஜாதகம் சரியில்லையென்றால் ஒதுக்கி விடுகிறார்கள்.

மூட நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் 5 வருடத்திற்கு ஒருமுறை கிரகம் மாறுகிறதா ?

சகோதர சகோதரிகளே, இந்த பதிவின் நோக்கம் ஜோதிடம் பார்ப்பவர்களை புண்படுத்துவதற்காக அல்ல. ஆனால் ஜோதிடம் சொல்வது தான் நூறு சதவீதம் சரி என்று நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று தான் நான் கூறுகிறேன்.


Monday, 5 September, 2011

நண்பரின் இழப்பு


 நண்பர்களே இது ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவம்.

ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் தன்னுடன் ஒரே அக்காவுடன் பிறந்த நண்பர் ஒருவர் தன்னுடைய 19 வது வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது என்பதால் எல்லோரைப்போலவும் வெளிநாட்டு கனவு அவருக்கும் வந்தது. அவரும் வெளி நாடு ( சிங்கப்பூர்) சென்றார்.

சிங்கப்பூரில் கிட்டதட்ட 11 வருடம் வேலை செய்தார். தனக்கு 27 வயதாக இருக்கும் போது சொந்தம் இல்லாத ஒருப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பணத்திற்க்காக 4 வருடம் சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை ஓட்டினார். திருமணத்திற்கு பிந்தைய இந்த 4 வருட சிங்கப்பூர் வாழ்க்கையின் போது அவரின் மனைவிக்கு குழந்தை உருவாகவில்லை. அதனால் தனது சிங்கப்பூர் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு 2008 ஆம் ஆண்டு கடைசியில் தாய் நாடான தமிழகம் நோக்கி புறப்பட்டார். 2009 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அவரின் மனைவி.  எல்லா விசயங்களிலும் நன்றாக யோசித்து தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் இவர்.

அதே போலவே யோசித்து 2009-ல் சிறுதொழில் ஒன்றை தொடங்கினார். மினிவேன் வாடகைக்கும், கைத்தொலைப்பேசி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், மீன் வளர்த்தல் போன்ற தொழில் நடத்தி வந்தார். தொழில் நன்றாக போனது. எல்லா செலவுகளும் போக வருடத்திற்கு 2 லட்சம் மீதம் பண்ண முடிந்தது. இது கிட்ட தட்ட சிங்கப்பூரில் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அளவுக்கு ஈடானது என்றே சொல்லலாம்.

இப்படி சந்தோசமாக போனவரின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் வழக்கம் போல தனது மொபைல் கடையை மூடிவிட்டு தனது மீன்குளத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக (இவருக்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியும்) தனியாளாக போனவர் அங்கேயே மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார்.

இன்று இரவு கடையிலே தூங்கிவிட்டார் போல என்று நினைத்திருந்த மனைவிக்கு தெரியாது அவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார் என்பது. காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு அவரின் மனைவிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

 11 வருடம் தாயை பிரிந்தும் 4 வருடம் மனைவியை பிரிந்தும் வாழ்ந்த அவருக்கு, தன் வாழ்க்கையின் வசந்தகாலம் ஆரம்பமாகும்போது இப்படி உலகத்தை விட்டே போய் விட்டாரே. எல்லோரிடத்திலும் சிரித்த முகத்தோடு பேசுபவர், வீண் வம்புக்கு போகாதவர், தாய்க்கு நல்ல பிள்ளையாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்த இவருக்கு ஏன் இப்படி நடந்தது.  இப்போது இவரின் மனைவி இரண்டாவது முறையாக 7 மாத கற்பிணியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு யார்? வயதான மாமியார் இன்னும் எவ்வளவு காலம் இவருக்கு ஆதரவளிப்பார்.

ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, கடவுள் சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்த இவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள் நண்பர்களே. என்னத்த சொல்லி அழுவது, எப்படி மனதை தேற்றிக்கொள்வது என்றே தெரியாமல், மீளாத துக்கம் தாளாத சோகத்தில் நடுக்கடலில் சூறாவளியில் சிக்கிக்கொண்ட படகைப்போல தத்தளிக்கிறார்கள். கடவுளுக்கு கண்ணிருந்தால் இதுபோல இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளட்டும் (அ) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.


Sunday, 28 August, 2011

கிராமத்து சொர்க்கம்

இரவு நிலா வெளிச்சத்தினில்
எல்லோரும் கூடி உணவருந்தும் சுகம்
இப்போது இல்லையே

தாத்தாவும் பக்கத்து வீட்டாரும்
உலகக் கதை பேசும் சுகம்
இப்போது இல்லையே

திருவிழா காலங்களில் ஆண்களும்
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே

கார்த்திகை தீபத்திற்கு பெண்களெல்லாம்
ஏரியில் விளக்கு விடுவது
இப்போது இல்லையே

நம் வீட்டு குழம்பு ருசிக்காதபோது 
பக்கத்துவீட்டு குழம்பு வாங்கி சாப்பிடும் சுகம்
இப்போது இல்லையே


வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே

எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!