About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 30 July 2011

'எனது வாழ்க்கை முன்னேற்றம் காணாவிட்டால் நான் மீண்டும் போரிட நேரிடலாம்'

ஸ்ரீலங்கா காவல்துறை ஒருவர் தமிழர் ஒருவரை சிங்கள மொழியில் கேள்விகள் கேட்டதை RNW [RADIO NETHERLANDS WORLDWIDE ] குழுவினர் நேரடியாகப் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட அந்நபருக்கு சிங்கள மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு காவற்துறையினர் கட்டளையிட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு 'நெதர்லாந்தின் உலகளாவிய வானொலி நிறுவனம்' [RADIO NETHERLANDS WORLDWIDE - RNW] தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது நடந்து முடிந்த சிறிலங்காவின் வடபகுதிக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றிப்பெற்றுள்ளது. 

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக 'நெதர்லாந்தின் உலகளாவிய வானொலி நிறுவனம்' [RADIO NETHERLANDS WORLDWIDE - RNW] சிறிலங்காவிற்குப் பயணம் செய்திருந்தது.  
 
"இங்கே எனது வாழ்க்கை முன்னேற்றம் காணாவிட்டால் நான் மீண்டும் போரிட நேரிடலாம்" என தெரிவித்துள்ளார். "நான் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் எமக்கான அடிப்படை உரிமையை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு அரசசார்பற்ற நிறுவன வளாகத்திற்குள் வைத்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் 9 பேரிடம் RNW நேர்காணல் ஒன்றை மேற்கொண்டது. 

இவர்கள் யுத்தமும் தமது இன்றைய வாழ்வும் தொடர்பாக மிக விளக்கமாக வெளிப்படையாகத் தமது கருத்துக்களைக் கூறினர். இவர்களில் 6 ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளடங்கியிருந்தனர். 

சிறிலங்கா அரசாங்கமானது நிரந்தர சமாதானதமும் அமைதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்துள்ள போதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறிலங்கா காவற்துறையினர் தொடர்பாக தற்போதும் அச்சத்துடனேயே வாழ்வதாகவும், சிங்கள மக்களைப் போன்று சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களாகிய தாம் சம உரிமைகளைப் பெற்று வாழவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 
 
அங்கு நின்றிருந்த அந்த முன்னாள் போராளிகளை மிக நெருக்கமாக உற்று நோக்கிய போது அவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் காயப்படுத்தப்பட்டிருந்தார்கள். யுத்தத்தின் வடுக்களைத் தாங்கியவாறு காணப்பட்ட இந்த ஒன்பது முன்னாள் போராளிகளும், 30 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் புலிகள் தரப்பில் பங்காற்றியவர்களாவர். 

இவர்களில் பெரும்பாலனவர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் புலிகள் அமைப்புடன் இணைந்தவர்களாவர். இவர்களில் இருவர் மட்டுமே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் கீழ் இணைக்கப்பட்டவர்களாவர். 

இவர்களில் சிலர் 2009 ல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் தாமாகவே அரச படைகளிடம் சரணடைந்துள்ளார்கள். ஏனையோர் படையினரால் கைதுசெய்யப்பட்டவர்களாவர். இதன் பின்னர் இவர்கள் அனைவரும் 'புனர்வாழ்வு முகாங்கள்' என்றழைக்கப்படும் சிறைச்சாலைகளுக்கு கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர்.
 
 இங்கே சித்திரவதைகள், உணவு மற்றும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு இருந்துள்ளன. அதன் பின்னர், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், புனர்வாழ்வு முகாங்களில் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டதுடன், இங்கிருந்த முன்னாள் புலி  உறுப்பினர்கள் அடையாள அட்டைகளையும் பெற்றுக்கொண்டனர். 

இதன் மூலம் போருக்குப் பின்னான சூழலுடன் ஒத்து வாழ்வதற்கேற்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டன. நேர்காணலில் பங்குபற்றியிருந்த மூன்று முன்னாள் போராளிகளும் தமது இருபது அல்லது முப்பது வயதுகளில் தமது நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு தொடர்பாகக் கூறியுள்ளார்கள். 

"நாளை என்ன நடக்கப் போகிறது?" என்பதுதான் இவர்களின் கேள்வியாகும். இவர்களில் பெரும்பாலானோர் தாம் இழந்த சுதந்திரம் தமக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். "நாங்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் கூட சுதந்திரமாக வாழவில்லை" என்கின்றனர். 
 
தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் இராணுவ முகாங்களைக் கடந்து செல்ல வேண்டியவர்களாக உள்ளனர் எனவும் அவ்ர்கள் தெரிவித்துள்ளார். 

"புனர்வாழ்வு பெற்று விடுதலை அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒவ்வொரு மாதமும் 'நன்னடத்தைத் தாள்' ஒன்றில் கையொப்பம் இடவேண்டும். இவர்களை காவற்துறையினர் சந்தேகிப்பர். இங்கே எமக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் எனது வீட்டிற்குத் திடீரென வந்த சிறிலங்கா காவல்துறையினர் அதனை சோதனை புரிந்தனர். அவர்களுக்கு என்ன தேவைப்பட்டது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார். 
 
சிங்களவர்களை விட தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் காணப்படும் தொழில் வாய்ப்பைப் பெற முயற்சிக்கும் ஒருவர் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும் என்பது ஒரு முக்கிய பொருளாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சிறிலங்காத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் 'சிங்களமயப்படுத்தலுக்கு' உள்ளாவதாக நேர்காணலில் பங்குபற்றிய முன்னாள் புலி உறுப்பினர்கள் சுட்டிககாட்டியுள்ளனர். 

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களாக இருந்த பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேறுவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கி வருகின்றது. சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள காவற்துறை மற்றும் இராணுவத்தினர் தமிழ் மொழியைப் பேச மறுக்கின்றனர். 

சிறிலங்கா காவற்துறை ஒருவர் தமிழர் ஒருவரை சிங்கள மொழியில் கேள்விகள் கேட்டதை RNW குழுவினர் நேரடியாகப் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட அந்நபருக்கு சிங்கள மொழி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு காவற்துறையினர் கட்டளையிட்டமையும் குறிப்பிடத்தக்கது. 
 
 மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வட கிழக்குப் பகுதி மீது எல்லோரது கவனமும் குவிந்துள்ளது. 

தற்போது அனைத்துலகத்தாலும் பேசப்படுகின்ற தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே 1980களில் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நீண்ட காலமாகத் தொடர்ந்து தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. 

சிறிலங்காவானது  'சம உரிமை பெற்ற சமூகங்களைக்' கொண்ட ஒரு நாடாக மிளிர்வதுடன்,  சிறுபான்மை தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க, தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச மீது அழுத்தம் கொடுத்துள்ளார். 
 
"சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தமானது நிறைவுக்கு வந்ததுடன், பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்பட்டதை எண்ணி நான் மிக மகிழ்வடைகின்றேன். எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்டுள்ள போதிலும், சமாதானத்திற்கான களத்தை நாம் இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பதை வெறுமன பார்த்துக் கொண்டு என்னால் இருக்க முடியாது" எனவும் சந்திரிக்கா குமாரதுங்கா மேலும் தெரிவித்துள்ளார். 

தமிழ் புலிகளின் தலைமையுடன் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சமாதான முயற்சிகள் அனைத்தும் அடியோடு அழிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மீண்டும் ஆயுதங்களை தூக்குவதற்கான ஏதாவது எண்ணம் உள்ளதா என்பது  தொடர்பாக நேர்காணல் மேற்கொண்ட முன்னால் புலி உறுப்பினர்களிடம் RNW குழுவினர் வினவினர்.

"இனிவருங் காலங்களில் எமது உரிமைகள் மதிக்கப்படாது தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்பட்டால், நான் ஆயுதத்தை மீண்டும் தூக்கவேண்டிவரும்" என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார் எனவும் கூறியுள்ளனர்.1 comment:

  1. இனிவருங் காலங்களில் எமது உரிமைகள் மதிக்கப்படாது தொடர்ந்தும் நாம் புறக்கணிக்கப்பட்டால், நான் ஆயுதத்தை மீண்டும் தூக்கவேண்டிவரும்" என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார்

    அதாவது உரிமைகள் மதிக்கப்பட்ட காரணத்தால் வெள்ளை கொடி பிடித்து முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார்கள்.

    நான் ஆயுதத்தை மீண்டும் தூக்கவேண்டிவரும்

    இப்படி சொல்லியே எத்தனை தமிழ் குடும்பங்களின் வாழ்க்கையை அழிப்பார்களோ?

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க